சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்; நீதி அமைச்சர் அலி சப்ரி

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் நீதித்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்யவும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் சைத், நீதி அமைச்சர் அலி சப்ரியை நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது, நீதித்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எடுத்துக் கூறினார்.

இலங்கை, பலஸ்தீன நாடுகளுக்கிடையே நீண்ட காலத்தில் இருந்து உறுதியான ஒத்துழைப்பு இருந்து வருகின்றது. இந்த ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதேபோன்று புதிய அரசாங்கத்தினால் நாட்டுக்குள் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இலங்கை, பலஸ்தீன நாடுகளுக்கிடையில் இருந்து வரும் ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது பலஸ்தீனத் தூதுவர் அமைச்சருக்கு எடுத்துக்கூறியதுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இந்த ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் உறுதியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.