வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் காலமானார்

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் (54) உடல் நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் பாபு சிவன், இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி,பைரவா திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

2009ம் ஆண்டு வேட்டைக்காரன் என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு பாபு சிவன் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலை இயக்கி வந்தார்.

இவர் கடந்த இரண்டு நாள் முன்பு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களாக மயக்க நிலையில் இருந்த பாபு சிவனுக்க சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.