20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் திருத்தப்பட்டுள்ளன: அமைச்சர் உதய கம்பன்பில

20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகளை திருத்தியமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஞானரத்தன தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“20 ஆவது அரசமைப்பு திருத்தத்தில் சில குறைப்பாடுகள் இருந்தன. அதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டபோது, தான்தோன்றித்தனமான தலைவராக இருந்தால் எனக்கு தேவை என்றால் நான் இதனை செய்வேன் எனக் கூறியிருப்பார்.

ஆனால், அவர் உடனடியாக குழுவொன்றை நியமித்து குறைகளைக் கண்டறியுமாறு பொறுப்பை ஒப்படைத்தார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் கூடிய நாம் இந்தக் குறைபாடுகளைத் திருத்தினோம்.

இத்தகைய ஆவணங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அதன் குறைபாடுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை. மனிதர்களுக்கு தவறு ஏற்படுகின்றமை இயல்பானது. அந்த தவறை ஏற்றுக்கொள்வதே முக்கியமாகும்.”