மாகாண சபைகளை இல்லாதொழிப்பது குறித்து எந்த முடிவும இல்லை – அமைச்சர் பீரிஸ்

“மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

மாகாணச பை முறைமை நீக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மாகாண சபை முறைமை தொடர்பில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எந்தவொரு விடயமும் இல்லை. 20 ஐ நிறைவேற்றிய பின்னர் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும்.

அப்போது மாகாண சபை முறைமை தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறவில்லை. மாகாண சபைகள் இயங்காமலேயே எல்லாம் நடைபெறுகின்றன.

எனவே, மாகாண சபை முறைமை தேவைதானா என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால், இதுபற்றி அரசு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது.

ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை நின்றது. தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பினர் உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.