20 ஆவது திருத்தத்தை யாரும் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்; நாமல் ராஜபக்‌ஷ தெரிவிப்பு

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தலாம். ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் கருத்திற் கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷதெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டுக்காக உருவாக்கப்பட்டதல்ல, அரசாங்கத்தின் தேவைக்காக அவசர அவசரமாக இயற்றப்பட்டது. இதன் பயனை மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெற்றன. நாட்டுக்குப் பொருந்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு இதன் காரணமாகவே அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டு 20 ஆ வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

20 ஆவது திருத்த சட்ட வரைபை யார் தயாரித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது. நாட்டு மக்கள் எவரும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாககல் செய்யலாம்.”