தென்னிந்தியா, மாலைதீவுக்கான விமான சேவைகள் இரத்மலானையிலிருந்து; அமைச்சர் பிரசன்ன தகவல்

தென்னிந்தியா மற்றும் மாலைதீவை இலக்காகக்கொண்டு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சர்வதேச விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இரத்மலானை விமான நிலையத்தின் மூலம் சர்வதேச விமான சேவைகளை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வுள்ளதாகவும் நிறுவன மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஜெட் விமானத்திற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சிவில் மற்றும் வர்த்தக சேவைகளை அதிகரித்தல், பிராந்திய விமான சேவைகள் தொடர்பில் உள்ள கேள்வியை கருத்திற்கொண்டு விமான சேவைகளை ஆரம்பித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கிணங்க, முதற்கட்டமாக தென்னிந்தியா மற்றும் மாலைதீவிற்கான விமான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும் சர்வதேச விமானங்களுக்கும் தரையிறங்குவது மற்றும் தரித்து வைத்திருப்பது தொடர்பாக அறவிடப்படும் கட்டணத்தை ஒருவருட காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்திவைக்க திர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும் சர்வதேச விமானங்களுக்காக சலுகைக் கட்டணத்தில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கும் விமான நிலைய வரியில் 50% சலுகை வழங்கவும் ஒரு வருட காலத்திற்கு அதனை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.