ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிகளை 20 ஆவது திருத்தம் மீறுகின்றது: மனித உரிமைகள் ஆணையாளர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையா ளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கடுமையாக எதிர்த்துள்ளார். இலங்கை ஐ.நாவுக்கு வழங்கிய உறுதி மொழிகளை இந்தத் திருத்தத்தின் மூலம் மீறுகின்றது எனத் தெரிவித்து இலங்கையின் போக்குக்கு அவர் கடும் கண்டனமும் வெளியிட்டிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் நேற்று ஆரம்ப உரையை ஆற்றும்போது அவர் இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். மிச்செல் பச்லெட் அம்மையார் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“20ஆவது திருத்தத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன அமைப்புக்களின் சுயாதீனத் தன்மை பறிபோகும். ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. அந்த உறுதிமொழிகளை நிராகரித்தே இலங்கை செயற்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இலங்கையில் தெரிவாகியுள்ள புதிய அரசு மறுத்து வருவது குறித்து நான் கவலைப்படுகின்றேன். 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது.

அத்துடன் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தில் வரைவில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்ககள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் இதுவும் ஐ.நாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதாகவே அமையும்.

இலங்கையில் படுகொலைகளில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜண்டுக்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுத்துள்ளார். முக்கிய சிவில் நிர்வாகத் துறைகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகையவர்கள் தமது கடந்த காலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது பொலிஸ் மற்றும் நீதித் துறையில் தலையீடு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படலாம். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தணிகள் ஆகியோர் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஏற்படுவதற்கு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழல் ஏற்படவேண்டும். இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை அதிக கவனம் செலுத்தும்.”