சீக்கிரம் மிகப்பெரிய அருமையான எண்ட்ரியுடன் வருவேன்; வடிவேலு வீடியோவில் செய்தி

வைகைப் புயல் வடிவேலு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்ளுக்கு நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோவில், “சீக்கிரம் மிகப்பெரிய அருமையான எண்ட்ரியுடன் வருவேன்” என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் சினிமா ஒரு கலாச்சாரமாக மாறியிருக்கிறது. எல்லா கலைகளையும் தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும் மாபெரும் பிரமாண்ட கலை வடிவாமனா சினிமா இன்று உலககின் பொது கலைப் படைப்பு வடிவமாக மாறியிருக்கிறது.

அதிலும் தமிழகத்தில் சினிமா மக்கள் கலாச்சராமாக மாறியதோடு மட்டுமல்லாமல், சினிமா கதாநாயகர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாறியிருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கதாநாயகர்களுக்கு இருப்பதைப் போல, நகைச்சுவை நடிகர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றில், என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, விவேக், வடிவேலு என்று ஒரு பெரிய ராஜபாட்டைகளை அமைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது நடிப்புடன் கூடிய கவுண்ட்டர் டயலாக்தான் என்று ஒரு பாணி தொடர்ந்து வந்திருகிறது. இந்த பாணியில் முற்றிலும் வேறானவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. சினிமாவில் தனது உடல் மொழி மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்து வருகிறார். வடிவேலுவின் பல வசனங்கள், முக பாவனைகள் இன்றைக்கு பல அரசியல் பிரச்னைகளை விமர்சிப்பதற்கான மீம்களாக மாறியுள்ளன.

இந்தியாவில் தமிழகத்தைப் வேறு எந்த மொழியிலாவது இத்தனை மீம்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிறதா என்று தெரியவில்லை. தமிழில் இன்று வெளியாகும் சமூகம், காதல், இன்பம், துன்பம், அரசியல் என எல்லா நிகழ்வுகளைப் பற்றியும் மீம்ஸ்கள் வெளியாகிறது. இந்த மீம்ஸ்கள் பெரும்பாலும் வடிவேலு என்ற மகா கலைஞனுடையதாகத்தான் இருக்கிறது.

தான் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். மீம்ஸ்களின் அரசனாக வலம் இம்சை அரசன் வடிவேலுவுக்கு செப்டம்பர் 12ம் தேதி பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் தெரிவித்ததால் நேற்று வடிவேலுவின் பிறந்தநாள் வாழ்த்து சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆனது.

ஆயிரக் கணக்கான ரசிகர்களும் நெட்டிசன்களும் தன்னை மறக்காமல் இப்படி அன்புடன் வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார்களே என்று அறிந்த நடிகர் வடிவேலு அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “செப்டம்பர் 12 என்னுடைய பிறந்தநாள். நான் வந்து தினமும் மக்களை சிரிக்க வைக்கணும் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்துகொண்டிருக்கிறேன். முதலில் நான் எனது அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். என் குல சாமியை கும்பிட்டுக்கிறேன்.இவ்வளவுக்கும் காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எங்க அம்மா என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நானே கிடையாதுனு வச்சுக்குங்களேன். எங்க அம்மாவுக்குப் பிறகு மக்கள்தான். அந்த மக்களால்தான் நான் மக்களை சிரிக்க வச்சுகிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்னொரு கேள்விகூட நீங்கள் கேட்கலாம். என்ன கேட்கலாம், ஏன் இவரு இன்னும் நடிக்காம இருக்காரு? ஏன் ஏன் நடிக்கமாட்டிங்கறீங்கனு கேட்கலாம். ஒன்னுமே இல்ல. சீக்கிரம் ஒரு மிகப்பெரிய அருமையான ஒரு எண்ட்ரியோட நான் வருவேன். வாழ்க்கைன்னா எங்க இருந்தாலும் சைத்தான் சனியன் இருக்கத்தான் செய்யும். அது எல்லார் வாழ்க்கையிலும் உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க அங்கங்க ரெண்டுரெண்டு இருக்கத்தான் செய்யும்.” என்று நகைச்சுவையுடன் பேசியுள்ளார்.

வைகைப் புயல் வடிவேலு, சீக்கிரம் மிகப்பெரிய அருமையான எண்ட்ரியுடன் வருவேன் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.