கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மாத்திரம், 26 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கட்டாரில் இருந்து திரும்பிய 22 பேருக்கும், குவைத்தில் இருந்து திரும்பிய 2 பேருக்கும், இந்திய, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து திரும்பிய தலா ஒருவருக்கும் நேற்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3195 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 200 பேர் மாத்திரமே தற்போது மருத்துவமனைகளில் சிகிக்சையில் உள்ளனர். 12 பேர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அண்மைய நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்தே புதிய தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.