இந்தியாவுக்கான விஷேட தூதுவராக மிலிந்த நியமிக்கப்படுவாரா? அதிகரிக்கும் எதிர்ப்பு

கோட்டாபய அரசினால் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட அமெரிக்க அரசின் உளவாளி என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் சாடியுள்ளது.

மிலிந்த மொறகொட அமெரிக்காவின் அரசின் ஒற்றராகச் செயற்பட்டுள்ளமை விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அவரது பெயர் குறிப்பிடப்பட்ட கேபிள் செய்திகள் மூலம் உறுதியாகி இருப்பதால், அவரை வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்கக்கூடாது என அந்த ஒன்றியம் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் வசந்த பண்டார, அந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மிலிந்த மொறகொடவின் பிரச்னை சம்பந்தமாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியையும் வசந்த பண்டார தனது முறைப்பாட்டில் இணைத்துள்ளார்.

மிலிந்த மொறகொட அமெரிக்க அரசின் ஒற்றராக செயற்பட்டுள்ளமை, 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்களாக இருந்த 4 பேர் அனுப்பியுள்ள 150க்கும் மேற்பட்ட கேபிள் செய்திகளை ஆராயும்போது அறிய முடிவதாக பல தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் அவர் அமெரிக்காவின் ஒற்றராக குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த கேபிள் செய்திகளை வாசிக்கும்போது இது மிகத் தெளிவாக புலப்படுகின்றது. இதனை தவிர அரச வளங்களை குறைவாக மதிப்பிட்டு தனக்கு நெருக்கமான தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு தனது அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என அவருக்கு எதிரான இரண்டு வழக்கு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும் எனச் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவரை குற்றவாளியாக அறிவித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்.

இப்படியான நபரை இலங்கையின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக பெரிய அழுத்தங்களை கொடுக்கக்கூடிய (இந்தியா) நாடொன்றின் தூதுவராக நியமிப்பதன் மூலம் முழு தூதரக சேவை தொடர்பாக மக்களின் நம்பிக்கை சீர்குலையும் என்பதால், மிலிந்த மொறகொடவை அந்த பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கவேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் வசந்த பண்டார தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.