20 ஆவது வரைவில் திருத்தத்துக்கு அரசு முடிவு; அமைச்சர் விமல் வீரவன்ச சொல்கின்றார்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்து ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான திருத்த வரைவு வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னரே அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20 ஆவது திருத்த வரைவுக்கு ஆளும்கட்சிக்குள்ளேயே கடுமு எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. அதனால் இந்த வரைவில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள திருத்த வரைவில் சில பிரச்சினைகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அதனை ஆராய்வதற்கு குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கையின் படி, திருத்தப்பட்ட புதிய வரைவு வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.