20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க 15 எதிரணி உறுப்பினர்கள் இணக்கம்?

பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு 15 எதிரணி உறுப்பினர்கள் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதோடு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் இதில் அடங்குவதாக கொழும்பில் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மக்கள் பெரும்பான்மை ஆணையை வழங்கியுள்ளதால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற இணக்கப்பாட்டுக்கு இவர்கள் வந்துள்ளனர்.