கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.தே.க. தலைமையை ஏற்பது குறித்து பரிசீலிக்க தயார்; மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பது தொடர்பாக தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது தொடர்பாக ஆராய்ந்துபார்க்க முடியும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகிய பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருந்தேன். அது எவ்வித மாற்றமும் இன்றி தொடரும். நான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றேன் என்ற காரணத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து விலகினேன்.

நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துவிலகவில்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ரணில் விக்ரமசிங்க தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க என்பவர் மிகவும் சிரேஷ்ட தலைவர். ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கவே அவர் கட்சியில் தொடர்ந்தும் இருந்து வருகிறார். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு கிடைக்காமல் போன சிறந்த தலைவர் என்பதை தான் நேரடியாகவே கூறுகின்றார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.