நானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி

தானே தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 122 நினைவு தினம் காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முன்பு நேற்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

கேள்வி:- உங்கள் தந்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- என்ன நினைக்க வேண்டும்.? நானே சு.கவின் தலைவர் மைத்திரி சட்டவிரோத தலைவர்;

கேள்வி:- சுதந்திரக் கட்சி பயணிக்கும் பாதை சரியானதா?

பதில்:- எந்தப் பயணமும் இல்லை. இதில் சரி, பிழை எனக் கூறுவது எப்படி?

கேள்வி:- சுதந்திரக் கட்சிக்கு தற்போது அநீதி இழைக்கப்படுவதாக தற்போது இருப்பவர்கள் கூறுகின்றார்களே?

பதில்:- இதனை ஒரு வருடத்துக்கு முன்பே நான் கூறி விட்டேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.

கேள்வி:- இன்றைய நினைவு அஞ்சலி நிகழ்வுக்கு உங்களுக்கு அழைப்பு கிடைக்கவில்லையா?

பதில்; இல்லை. எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த இடம் சொந்தமில்லை. நாம் விரும்பிய நேரத்தில் இங்கு வருவோம்