யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் திட்டமிட்டு இரவு வேளை இடித்தழிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் உணர்வெழுச்சியுடன் சம்பந்தப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தை, பல்கலைக்கழகத்தை மூடி விட்டு – இருட்டுக்கு மத்தியில் – கபடத்தனமாக இடித்தழித்துத் தற்குறித்தனம் புரிந்திருக்கின்றது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம். “அனுமதி அற்ற கட்டமைப்பு’ என்ற பெயரில் அது இடிக்கப்பட்டது என துணை வேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா இப்போது விளக்கம் கூறினாலும், மாணவர்களினதும், பொதுமக்களினதும், அரசியல் தலைவர்களினதும் கண்களில்படாமல், அதனை இடித்தழிக்கும் வேலை மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு நிறை வேற்றப்பட்டதிலிருந்து இதன் பின்னணி அம்பலமாகியுள்ளது.
மேற்படி தூபி இடிக்கப்பட்டமை பற்றிய செய்தி தமிழர் தேசம் எங்கும் காட்டுத்தீ போல பரவியது. பல இடங்களில் இருந்தும் மாணவர்களும், ஆர்வலர்களும் இரவு வேளையில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் நூற்றுக்கணக்கில் கூடினர். யாழப்பாணத்துக்கு வெளியிலும் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் உணர்வெழுச்சியாளர்களை உசுப்பி விட்டிருக்கும் இச்சம்பவத்தை அடுத்து, மக்கள் மத்தியில் யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர் உட்பட்ட நிர்வாகத்தினருக்கு எதிராகக் கடும் சீற்றம் கிளர்ந்துள்ளமையையும் உணர முடிந்தது.
நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தி பரவி, யாழ் பல்கலைக்கழக முன்றிலில் மாணவர்கள் உட்படப் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டமையை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தினால், பல்கலைக்கழகப் பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் களம் இறக்கப்பட்டனர். இராணுவம், விசேட அதிரடிப்படை, மோட்டார் சைக்கிள் படையணி என்று அனைவரும் பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்தனர். பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர்.