கொரோனாவினால் உயிரிழந்தோரை தகனம் செய்ய நிபுணர்குழு பரிந்துரை – சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது ஏனைய காரணங்களுக்காக மாற்றப்படாமல் செயற்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை பிரதான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.