கொரோனாவால் மூவர் மரணம் – உயிரிழப்பு 222 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மேலும் மூவர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீதிரிகல பகுதியைச் சேர்ந்த53 வயது ஆண் ஒருவரும், பேருவளைப் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 ஐ சேர்ந்த 89 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று இரவு 7 மணிவரை 255 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 201 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும், 54 தொற்றாளர்கள் சிறைச்சாலைக் கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர்.

இதற்கமைய இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 753 ஆகவும் மொத்தத் தொற்றார் எண்ணிக்கை 46 ஆயிரத்து 503 ஆகவும் உயர்வடைந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 661 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6 ஆயிரத்து 623 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.