யாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் நண்பர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன் அவர்கள் உணவருந்திய உணவகத்தையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முடக்கியுள்ளது.

நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே கச்சேரி – நல்லூர் வீதியில் வசிக்கும் மருத்துவபீட மாணவனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மாத்தளையை சேர்ந்த அந்த மாணவன், கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை அவரின் தாயாருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. யாழ். மாநகர சுகாதார சேவைகள் பணிமனை குறித்த மாணவனிடம் இருந்து உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்று ஆய்வுகூடத்திற்கு அனுப்பினர். பரிசோதனையில் மாணவனுக்கு தொற்று இருப்பது உறுதியானதும், அவருடன் தங்கியிருந்த ஆறு நண்பர்களையும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், ஓட்டுமடத்தில் வீடு ஒன்றில் தங்கியுள்ள நான்கு நண்பர்களைச் சந்தித்திருந்தமையால் அவர்களும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தொற்றுக்கு உள்ளான மாணவரும் தனிமைப்படுத்தப்பட்ட அவரின் நண்பர்களும் வழக்கமாக உணவருந்தும் ஆனைப்பந்தி சந்தியிலுள்ள பிரபல உணவகத்தை முடக்கிய யாழ். மாநகர சுகாதார சேவைகள் பணிமனை, அனைத்து பணியாளர்களையும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் பணித்துள்ளனர்.