ஜெனிவாவை ஐக்கியமாக தமிழ்க் கட்சிகள் அணுகும் – 3 கட்சிகளின் கூட்டத்தில் இணக்கம்

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை பற்றிய விவகாரம் எடுக்கப்படவிருக்கையில் அதனை ஐக்கியப்பட்டு ஒரு நிலைப்பாட்டில் அணுகுவதற்கு முயற்சிப்பது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு கொழும்பில் கூடிப் பேசி முடிவு செய்தனர்.

இது தொடர்பாக ஒன்றுபட்ட நிலைப்பாட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிக்க முயற்சி செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான பொறுப்பை எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி மற்றும் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரிடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான கூட்டம் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இரவு விருந்துடன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் மாவை. சோனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., மருத்துவர் ப.சத்தியலிங்கம் (மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி), த.சித்தார்த்தன் எம்.பி (புளொட்), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ) ஆகியோரும் – தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பி, கலாநிதி க.சர்வேஸ்வரன், த.சிற்பரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, செல்வராஜா கஜேந்திரன் எம்.பி., சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும்கலந்து கொண்டனர்.

முன்னதாகக் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் நடைபெற்ற கூட்டங்களின் முடிவில், இத்தகைய பொது நிலைப்பாட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் சுமந்திரனும், கஜேந்திரகுமாரும், கொழும்பில் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனுடன் கூடி ஆராய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்குத் தமது பிரதிநிதியாக கலாநிதி க.சர்வேஸ்வரனை, நீதியரசர் விக்னேஸ்வரன் பிரேரித்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மூவர் குழு பெரும்பாலும் இன்று கூடி பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனத் தெரியவந்தது.