கொரோனாவைப் பயன்படுத்தி இராணுவத்தை பாதுகாக்க அரசு முயற்சி – யாஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த அமைப்பு அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொவிட் வைரசினை பயன்படுத்துகின்றது.

யுத்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார் என ஐநாவால் குற்றம்சாட்டப்பட்ட –பாரிய மனித உரிமை மீறல்களிற்காக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஜெனரல் இலங்கையின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளிற்கான தேசிய மத்திய நிலையத்திற்கு பொறுப்பாகயிருப்பது மாத்திரமல்ல.

கடந்த மாதம், 2009 இறுதிப்போரில் ஈடுபட்ட அனுபவமுள்ள 25 அதிகாரிகள் நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.

இதன் மூலம் சிவில் நிர்வாகமும் ஜனநாயக கட்டமைப்புகளும் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதுடன் சர்வதேச சமூகம் இராணுவமயப்படுத்தலை சாதாரணவிடயமாக கருதவேண்டிய நிலையும் சர்வதேச குற்றங்களிற்கு விடுபாட்டுரிமை வழங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது குண்டுவீசிய எறிகணை வீசிய மருத்துவமனைகளை தாக்கிய பொதுமக்களை பட்டினிபோட்ட உயிர்காக்கும் மருந்துகளை மறுத்த அதே அதிகாரிகளே அந்த மக்களின் சுகாதாரத்தினை பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதி;க்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது இந்த விவகாரத்தினை எவ்வாறு எதிர்கொள்வது என்ற நெருக்கடியான நிலையை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிவில் நிர்வாகம் செயல் இழக்கச்செய்யப்படுவதை அதிகாரமிழக்கச் செய்யப்படுவதை இராஜதந்திரிகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகமும் உதவக்கூடாது.

கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான மாவட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட 25 இராணுவஅதிகாரிகளில் 16 பேர் 2008-9 இறுதி யுத்தத்தில் போரிட்டவர்கள்.

இந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினர் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பது ஐநாவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களுடைய முன்னையஅவர்கள் இராணுவ வரலாறுகள் அவர்கள் எந்த அமைதிப்படை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடை செய்யக்கூடும் அதேவேளை தற்போது சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்- அவர்கள் தாங்கள் யுத்தத்தி;ல் தோற்கடித்தவர்களை அடிபணியச்செய்த இடங்களிலும் அவர்கள் தற்போது சுகாதார நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2009இல் இராணுவம் திட்டமிட்டு பொதுமக்கள் நிலைகளை தாக்கியது படுகொலைகளில் ஈடுபட்டது பலவந்தமாக காணாமல்போகச்செய்தலை முன்னெடு;த்தது பாலியல் வன்முறைகள் சித்திரவதைகளில் ஈடுபட்டது போதியளவு மருந்தும் உணவும் பொதுமக்களை சென்றடைவதை தடுத்தது தடை செய்தது என கருதுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சர்வதேச சட்டங்களை மீறியிருக்க கூடிய படையினரில் சிலர் தற்போது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் நாட்டின் சுகாதாரத்திற்கு பொறுப்பாகயிருப்பதும் அவமானப்படுத்தும் செயல் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகள் தற்போதுள்ள அரசாங்க அதிபர்களை புறக்கணித்துவிட்டு சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படுகின்றனர் நாடு முழுவதும் இது இடம்பெறுகின்றது எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். எந்த சுகாதார அவசரநிலையும் ஜனாநாயகத்தை அழிப்பதை நியாயப்படுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.