கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தில் இலங்கைக்கு முன்னுரிமை – இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை முற்பகலில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் – 19 தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது உறுதியளித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசியின் சிகிச்சை தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், அதனை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையிலான மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், திரவியங்கள், காற்றலை மின்னுற்பத்தி திட்டம், வீடமைப்பு, வீதி புனரமைப்பு, விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு, தொடர்பாடல், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் கல்வி அறிவை பெற்ற இளம் தலைமுறையினர் உள்ளதாக கூறிய ஜனாதிபதி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான பயிற்சிகளை வழங்க இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையர்களுக்கு தேவையான உரிய தொழில் பயிற்சிகளை வழங்க தமது நாடு தயாராகவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கோவிட் தொற்றினால் வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை, இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்களை நடத்த இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.