கொரோனாவுக்கு நேற்றும் இருவர் பலி – தொற்றாளர் தொகை 45 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமையகொரோனாத் தொற்றுக்குள்ளான இருவர் இறுதியாக உயிரிழந்துள்ளனர்.

மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும், களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 75 வயதான மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையில் நேற்றும் 479 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 41 ஆயிரத்து 977 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 247 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.