வடக்கில் நேற்று 13 தொற்றாளர்கள்

வடக்கில் நேற்று மாத்திரம் 13 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா ஐந்து பேருக்கும், யாழ்ப்பாணத்தில் இருவருக்கும், கிளிநொச்சியில் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், வவுனியா பட்டாணிசூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று, மன்னார் எருக்கலம்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே அவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் உடுவிலை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. தவிர, அண்மையில் கொழும்பு சென்று திரும்பிய நல்லூரை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்விகற்கும் கேகாலையை சேர்ந்த 23 வயது மாணவிக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.