இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறுமட்ட பேச்சுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் பல பிரமுகர்கள், வணிகத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பதுடன் இந்த ஆண்டின் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.