கருணாவை கூட்டமைப்புடன் இணைப்பது சாத்தியப்படாது – சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நான் அவர்களின் தவறுகளைத்திருத்த வேண்டுமென்றே விமர்சிக்கின்றேன். ஆனால், அவர்களுடனான உறவு இப்போதும் தொடர்கின்றது. எதிர்காலத்தில் அவர்களுடன் பேசுவதற்கும் தயாராக இருக்கின்றோம்’ என்று கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஊடகவிய லாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிவஞானம், “கருணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் இணைந்து செயற்பட விரும்புகின்றார் என்று தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக்கொள்ளும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரைக் கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என்றார்