சுற்றுலா பயணிகள் கொரோனா விதிகளை மீறி செயல்படுகின்றனர் – ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டு

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள உக்ரேன் நாட்டு உல்லாசப் பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றே இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின் செய்தியில், இலங்கை வந்துள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகள் முன்னதாக சுற்றுலா பயண அதிகார சபையுடன் எட்டப்பட்ட இணக்கத்தை மீறியுள்ளனர்.

கொரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள உக்ரைன் நாட்டிலிருந்து கடந்த டிசெ. 28ஆம்திகதி மத்தள விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஐந்து தினங்கள்கூட தனிமைப்படுத்தலில் இருக்கவில்லை.

இந்த சுற்றுலா பயணிகள் தொடர்பான விடயங்களை முன்னாள் தூதுவரே கையாள்கின்றார். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் அவருடன் தொடர்புகளை பேணுகின்றனர். ஆனால், முன்னாள் தூதுவர் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

சுற்றுலா பயணிகள் சிறியகுழுக்களாக பிரிக்கப்பட்டே பஸ்களில் ஏற்றப்பட்டு முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஆனால், இது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்திக்கு எந்தவிதத்திலும் உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்படவில்லை.

இதேவேளை, சுற்றுலா பயணஏற்பட்டாளர்கள் தாங்களாகவே 28 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோன்று ஏற்கனவே திட்டமிடப்படி படகுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர். உக்ரைன் சுற்றுலாப்பயணிகளை யாலா தேசிய பூங்காவிற்குள் கொண்டு செல்வதற்கு மறுத்துள்ள சாரதியொருவர் தான் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே மறுப்பு தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ள அந்த சாரதி சுற்றுலாப்பயணங்களை ஏற்பாடு செய்தவர்கள் அதிக பணம் கொடுத்ததால் ஏனைய சாரதிகள் அவர்களை அழைத்துச்சென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் தங்கள் கட்டணங்களை குறைக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.