கொரோனா அச்சுறுத்தல் – முடங்கியது திருமலை

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத் தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா தொற்றாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து அந்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழு மாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணிபுரியும் வேலை ஆள்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத் தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக இந்தப் பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.