கொரோனா பரவலை தடுக்க 70 வீதமானோருக்கு தடுப்பூசி – அனில் ஜாசிங்க அறிவுறுத்து

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாட்டு மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இலங்கை போன்ற நாடுகள் அதற்காகப் பாரியளவில் முயற்சிக்க வேண்டும். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்களுக்குத் தெரிந்த வியடங்களைவிட தற்போது அதிகளவில் அறிந்து கொண்டுள்ளனர் .

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை நாட்டில் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும். அவ்வாறில்லையெனில் குறைந்த பட்சம் நூற்றுக்கு 50 வீதமானோருக்கேனும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவும் நெருக்கடி நிலையில் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னால் செல்லாது விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதே சிறந்த விடயம். கண்டுபிடிக்கப்படும் இந்தத் தடுப்பூசிகளின் மூலம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியதாகவிருப்பின் அது நன்மைபயக்கக் கூடியவிடயமாகும்” என்றார்.