போர்க்குற்றம் நடக்கவில்லை ஜெனிவாவில் நிரூபிக்க தயார் – அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு

“இலங்கை இராணுவம் எந்தவகையிலும் யுத்தக் குற்றங்களைப் புரியவில்லை. மாறாக பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து தமது மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் நடவடிக்கையையே இராணுவம் புரிந்துள்ளது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய பதிலளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது”

இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

அதேவேளை, ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கத்தமது விருப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கை இராணுவம் எந்தவகையிலும் யுத்தக்குற்றங்களைப் புரியவில்லை. மாறாக பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் நடவடிக்கையையே இராணுவம் புரிந்துள்ளது. அந்த வகையில் இலங்கை இராணுவம் உலகில் எங்குமில்லாத வகையில் மனிதநேய செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன.

ஆகவே ஆதாரத்துடன் இதனை நிரூபிக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை இதற்கு முன்னர் ஐ.நா. மனித பேரவையில் ஒப்படைக்கத் தயாரானபோது தருஸ்மன் ஆணைக் குழு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்-ஹ_சைன் இடமளிக்கவில்லை.

எனவே, இம்முறை இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின்போது இலங்கை அரசாங்கம் அந்த இரு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளது. அத்துடன் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை என ஆதாரத்துடன் நிரூபிக்க அரசாங்கம் தாயாராகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க இதுவரை சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தயாராகியுள்ளன.

மேலும் கடந்த அரசாங்கம் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுக்கு சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அத்தகைய தீர்மானங்களிலிருந்து விலகி நாட்டின் சுயாதீனத்துவத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்துக்கொண்டு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்கவுள்ளது என்றார்.