இறுதிப் போரில் பங்கேற்றோர் வட க்கு கிழக்குக்கு நியமனம் – கொரோனாவைக் கட்டுப்படுத்த இராணுவம்

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை இராணுவத் தளபதியும் கொரோனா தேசிய கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வழங்கினார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களுக்கும் மேஜர் ஜெனரல் தரம் உடைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இறுதிப் போரில் பங்கேற்றிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மேஜர் ஜெனரல் டபிள்யூ. ஜி. எச். ஏ. செனரத் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறுகிய காலம் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாகவும், 51, 52 மற்றும் 55 படைப் பிரிவுகளின் தளபதியாக இருந்துள்ளார். இந்தப் படைப் பிரிவுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல மனித உரிமைகள் மீறல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேசமயம், இறுதிப்போரின்போது 572வது படையணியின் தளபதியாகவும் இவர் பதவி வகித்தார். கிளிநொச்சி – மேஜர் ஜெனரல் கே.என். எஸ். கொதுவேகொட முன்னர், ஆட்லறி படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டவர். முல்லைத்தீவு – மேஜர் ஜெனரல் ஆர்.எம். பி. ஜே. ரத்நாயக்க, வவுனியா – மேஜர் ஜெனரல் டபிள்யூ. எல். பி. டபிள்யூ. பெரேரா, மன்னார் – மேஜர் ஜெனரல் ஏ.ஏ. ஐ. ஜே. பண்டார.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் திருகோணமலை – மேஜர் ஜெனரல் சி. டி. வீரசூரிய, அம்பாறை – மேஜர் ஜெனரல் ரி. டி. வீரகோன், மட்டக்களப்பு – மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.