வங்கிகளின் வைப்பு இழப்பு பாரிய பொருளாதார வீழ்ச்சி – கரு ஜயசூரிய எச்சரிக்கை

வங்கிகளின் வைப்பு இழப்புக்கள் மற்றும் அவற்றின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் வீழ்ச்சி என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. எனவே தற்போது வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில் மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்று அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வங்கியின் வைப்பு இழப்புக்கள் மற்றும் மோசமடைந்துள்ள நம்பகத்தன்மை என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் தமது சிறியளவிலான சேமிப்பையே வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர்.

ஆகவே, தற்போது வங்கிகளைவிவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், அதிகரித்த வைப்பு இழப்புக்கள் மற்றும் முறைசாரா நிதி நடவடிக்கைகள் என்பவற்றுடனான மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும். அதேபோன்று கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சில முற்பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக பொருளாதார செயல்திறன் மந்தமடைந்திருப்பதுடன் உணவுப் பொருள்களின் விலைகள் பெருமளவுக்கு அதிகரித்திருக் கின்றன. இவற்றினால் சிறுவர்களும்,வயோதிபர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.