பெரமுனவிலிருந்தும் விரைவில் சஜித் தரப்புடன் பலர் இணைவர் – மத்தும பண்டார நம்பிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளனர்.

இதனை மிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித் தவை வருமாறு:

மக்களின் நிலைப்பாடுகள், தொழிற்சங்கள் மற்றும் அரசியல் நிபுணர்களின் பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தியாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யாப்பு உருவாக்கத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, யாப்பு உருவாக்கக் குழுவின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான திசத் விஜயமுனி, ஹர்மான் ஹசிம், நிமேஷ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய கட்சிகளை விடஜனநாயக முறையில் இந்த யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் அதிகாரம் காணப்படும் யாப்பாகவே நாம் இதனை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பையும் அடிப்படையாகக் கொண்டே இந்த யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பும் காலப்போக்கில் சர்வாதிகாரமானதாக மாற்றப்பட்டமையாலேயே மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர்.

எமது நிறைவேற்றுக்குழுவிலும் மக்களால் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். இதேபோன்று கீழ் மட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குகின்றனர். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களை 75 ஆக வரையறுத்துள்ளோம்.

இதில் கட்சியின் தலைவர், செயலாளர், உப தலைவர்கள், சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்டோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தை வருடத்துக்கு ஒரு முறை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருடாந்தம் மாநாடு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள் ளது. அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்சி உறுப்புரிமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.