மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் புதிய கொரோனாக் கொத்தணி உருவாகலாம் – பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் மகேஷ் பாலசூரிய, இவர்கள் பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே தாங்கள் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறும் மேல்மாகாணத்திலிருந்து மக்கள் வெளியே செல்வதைத் தடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த பகுதிகளில் புதியநோயாளர்கள் உருவாகும் ஆபத்தும் சிறிய கொத்தணிகள் உருவாகும் ஆபத்தும் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். துரித அன்டிஜென் சோதனைக்கு பதில் இந்த மாவட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனையை தீவிரப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.