மாகாணசபைத் தேர்தல்களை உடன் நடத்தவேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அல்ல – திஸ்ஸ

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பல்ல. மாறாகஅதற்கு உரிய காலத்தை அரசாங்கம் தேர்ந்தெடுத்து அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

“9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் “வெற்றி பெறுவோம்.’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சி யாப்புக்கான சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டு பங்காளி கட்சிகளின் நிலைப்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் விரைவாக இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு யாப்புக்கமைய கட்சி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இணைய வழியூடாகக் கற்பதற்கு சகல மாணவர்களுக்கும் வாய்ப்பு இல்லை. இவை தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக பலராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் எந்த வொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. இதற்குப் பதிலாகத் தேசிய சொத்துக்களை விற்பதையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகக் காணப்படும் சஜித் பிரமேதாஸவே கூட்டணியின் தலைவராகவும் பதவியேற்பார். அவரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவும் நியமிக்கப்படுவார். வேறு மாற்று தெரிவு கிடையாது. இதேவேளை மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அல்ல. அதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பதல்ல. அதற்கான உரியகாலத்தை தெரிவு செய்து நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.