மாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி

ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸின் துருப்பினர் பயணம் செய்த இராணுவ வாகனம் ஒன்று கண்ணியில் சிக்கியதில் படைவீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.

இத்தகவலை பிரான்ஸ் அதிபர் மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது. மாலியின் ஹொம்போறி (Hombori) பிராந்தியத்தில் படையினர் பயணம் செய்த கவச வாகனம் ஒன்று சக்திவாய்ந்த வெடி குண்டில் சிக்கியதாகத் தெரிவிக்கப் படுகிறது.

உயிரிழந்த படைவீரர்களை பெரு மரியாதையுடன் நினைவு கூர்ந்துள்ள அதிபர் மக்ரோன், ஆபிரிக்காவின் சாஹல் (Sahel) பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

மாலி நாட்டின் வடக்கில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை விரட்டும் “சேவல்” (Operation Serval) படை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினர் மூவரே உயிரிழந்துள்ளனர். 2013 இல் தொடங்கிய இப்படை நடவடிக்கையில் இதுவரை 47 பிரெஞ்சு படையினர் உயிரிழந்துள்ளனர்.