பெரும் விலைக்கு விற்பனையான வலிமை

ஒரு படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, ரிலீஸ் தேதியும் உறுதியான பிறகுதான் அடுத்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டவர்கள் அஜித் மற்றும் விஜய். மாஸ்டர் படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதால், விஜய் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அஜித்துக்கு வலிமை படம் தயாராகிவருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில், அஜித்துக்கு ஏற்பட்ட சின்ன விபத்தினால் படப்பிடிப்புத் தள்ளிப்போய் தற்போது மீண்டும் வேகம் கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் யுவன் இசையில் பாடல் கோர்ப்பு பணிகளும் நடந்துவருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என விசாரித்தால், இப்போதைக்கு அந்த ஐடியாவில் படக்குழு இல்லையாம். அதோடு, ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக் தகவலும் உண்மையில்லை என்கிறார்கள். கொரோனாவின் காரணமாக எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம் என்று இருக்கிறார்களாம்.

அதோடு கூடுதல் அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைக்கான விற்பனை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. அதில், பெரும் விலைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முந்தைய படங்களின் விலைகளைவிட, அதிக மடங்குக்கு இந்தப் படத்தின் விற்பனை நடந்திருக்கிறது.

கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை விடுமுறைக்கு வலிமை வெளியாகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது படக்குழு. வலிமை முடித்துவிட்டு, சுதா கொங்கராவிடம் கதை கேட்டு வைத்திருக்கிறார் அஜித். எப்படியும், சுதா இயக்கத்தில் அஜித் அடுத்த படமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.