தம்மிகவின் மருந்து குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி

ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டாரவின் பாணி மருந்து தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை என ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான தடுப்பு மருந்துகளை உபயோகிக்கும் போது அவற்றைத் தகுந்த முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தி அவை சாதகமானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த மருந்துப்பொருள்களால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். அத்துடன் ஆயுர்வேத முறைமையின் படி தம்மிகவினுடைய பாணி மருந்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இருப்பினும் ஆயர்வேத முறைமைகள் தொடர்பில் என்னிடம் எதனையும் கேட்கவேண்டாம். ஏனெனில் நாம் அவருடைய பாணி மருந்துக்கு அனுமதி வழங்கவில்லை.

மேலும் அம்மை நோயைக் குணப்படுத்தக் கூடியதாகவிருந்ததாக அவர் கூறுகின்றார். இது மத நம்பிக்கையாகும். ஆகவே இது தொடர்பில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. இருப்பினும் விஞ்ஞான ரீதியான தகவல்களை வழங்கத் தயாராகவிருக்கின்றேன். அதேவேளை, இது தொடர்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சிறந்த தெளிவுபடுத்தலை வழங்க முடியும்” என்றார்.