புதிய அரசமைப்புக்கான அரசின் வெளிப்பாடுகள் நம்பிக்கை தரவில்லை – சம்பந்தன்

புதிய அரசமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை தரும் வகையில் அமையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்தவாரம் நிபுணர் குழு விடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் புதிய அரசமைப்புக்கான செயல்பாடு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்ற விடயத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றி வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“போர் ஓய்ந்த பின்னரான சூழலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாடுகளுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்ந்தளித்து இனப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவேன் என்று இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வாக்குறுதியளித்திருக்கின்றார்.

ஆகவே தமிழ் மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக, பாதுகாப்பாக, அமைதியாக வாழ்வதற்குரிய வழிவகைகள் அரசமைப்பு ரீதியாக மீளப்பெறாதவாறு உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்றுக்கொண்ட இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் அவர் மீண்டும் ஆட்சிஅதிகாரத்தில் இருக்கின்றார். அவருடைய சகோதரர் ஜனாதிபதியாக இருக்கிறார். தற்போது அவர்கள் புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழு வொன்றை நியமித்திருக்கின்றனர். அந்தக்குழு அனைத்துத் தரப்பினரிடத்திலும் கருத்துக்களை கோரியுள்ளது. அந்தக்குழுவின் கோரிக்கைக்கு அமைய நாம் கூட்டமைப்பாக எமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவுள்ளோம்.

எதிர்வரும் வாரம் அந்தச் செயல்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் என்னுடன் இணைந்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவ ர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கவுள்ளனர். அந்த முன்மொழிவுகள் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகாதவாறும் எமது மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

மேலும் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள அரசாங்கம் புதிய அரசமைப்பு பணிகளை முன்னெடுக்கின்றமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அவை எமக்கு நம்பிக்கை அளிப்பதாகஇருக்கவில்லை” என்றார்.