இன்னும் இரு வாரங்களில் கொரோனாவுக்கு முடிவு – உறுதியாகக் கூறுகின்றார் இராணுவத் தளபதி

“இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திரசில்வா.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஏதுவான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் இரண்டு வாரங்களில் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் இந்நிலைமையை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனெனில் பிரித்தானியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. அத்துடன் புதிய வகை வைரஸ் தொற்றும் பரவி வருகின்றது. ஆனால், எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை இந்தளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளமை மகிழ்ச்சியான விடயம்” என்றார்.