சடலங்கள் தகனம் தொடர்பாக சகலரோடும் ஆலோசிக்க வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து

நாட்டில் வாழும் அனைத்து சமூகப்பிரிவினருடனும் கலந்துரையாடிய பின்னரே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.

ஒருவர் உயிரிழந்த பின்னர் அந்தச் சடலத்தை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? – என்பது தொடர்பான தீர்மானம் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமை எனும் அதேவேளை, விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பெளத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவுக்கு வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக்கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

கத்தோலிக்கர்கள் உயிரிழந்த பின்னர் சடலங்களை அடக்கம் செய்கின்றார்கள். முஸ்லிம்களும் ஜனாஸாக்களை அடக்கம் செய்கின்றார்கள். அவர்கள் அதனைதத்தமது மதநம்பிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்கின்றார்கள் என்பதுடன் அதற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சி எப்போதும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்கிவந்திருக்கிறது. அதேவேளை பெளத்தர்களும், இந்துக்களும் கூட சிலவேளைகளில் சடலங்களை அடக்கம் செய்வதுண்டு. இது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில், தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்வொன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஆகவே இந்த விவகாரத்தில் மக்களை இன மற்றும் மத ரீதியாகப் பாகுபடுத்தாமல், தற்போதைய சூழ்நிலை தொடர்பில் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடுவது அவசியமாகும். அதேபோன்று கொரியா, இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்பட்ட விதம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். சுகாதாரப்பிரிவினர் கூறுகின்ற விடயங்களையும் நாம் ஏற்கின்றோம். ஆகவே இந்த விடயம் தொடர்பில் அனைத்துப் பிரிவினருடனும் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” என்றார்.