சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தது. எனினும் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் சென்னை வந்து தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் திடீரென ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார். அங்கு ஒருசிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ரஜினிகாந்துக்கு 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்” என்று கூறப்பட்டது.

மேலும், “ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதுவுமில்லை. ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கம் இருந்ததன் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த அழுத்தப் பிரச்சினை தீரும் வரை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை” எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ரஜினிகாந்த் நலம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.