பண்டிகையைக் கட்டுப்பாட்டுடன் கொண்டாட விக்கி வேண்டுகோள் – கிறிஸ்மஸ் செய்தியில் கோரிக்கை

பண்டிகையைக் கட்டுப்பாட்டுடன் கொண்டாடுவோம் எனத் தமது கிறிஸ்மஸ் செய்தியில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

“எனதினிய மக்களிடம் ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பிலான அந்தச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

“நத்தார் வருடந் தோறும் ஒரு முறையே வரும். இறை இயேசு பாலகன் பிறந்த இந்தக் காலத்தில் உலகம் பூராகவும் அவர் பிறப்பைக் கொண்டாடுவார்கள். இவ்வருடம் இக் கொண்டாட்டங்கள் கவனத்துடனும் அவதானத்துடனும் நடைபெற வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.

நத்தார் பண்டிகையையும், வருடப் பிறப்பையும் அதன் பின்னர் வரவிருக்கும் தைப்பொங்கலையும் எம் மக்கள் கட்டுப்பாடுகளுக்கு அமையக் கொண்டாடுவார்களாக! இறை வழிபாடு மனதால் நடைபெற வேண்டும். இவ் வருடம் கூடிக் கும்மாளம் அடிப்பதை கட்டுப்படுத் துவோமாக!

பொருட்கள் வாங்கும் போதும் காய், கறி உணவு வகைகள் வாங்கும் போதும் கட்டுப்பாட்டுடன் இவ்வருடம் நடந்து கொள்வோமாக! இறையருளால் எம் மக்கள் யாவரும் நலமுடன் வாழப் பிரார்த்திக்கின்றேன்.”