சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – அரசிடம் சிவாஜிலிங்கம் வலியுறுத்து

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில்கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் கைதிகள் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ளபோதும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாதிருப்பது வேதனையானது.

தற்போது சிறைச்சாலைகளில் பரவும் கொரோனாத் தொற்றுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பலரும் உள்ளாகியுள்ள நிலையில், இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.