தென்னாபிரிக்காவின் புதிய வைரஸ் பிரிட்டனில் இருவருக்குத் தொற்றியது

தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கிருமி பிரிட்டனில் இருவருக்குத் தொற்றி உள்ளது.

பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்புடைய இரண்டு பேருக்கே லண்டனிலும், வடமேற்கு இங்கிலாந்திலும் புதிய வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து தென்னாபிரிக் காவுக்கான பயணக்கட்டுப்பாடுகளை பிரிட்டன் உடனடியாக நடைமுறைப் படுத்தி உள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து கடந்த 15 நாட்களுக்குள் பிரிட்டனுக்குத் திரும்பியவர்கள் எவராயினும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வடிவங்கள் (new variant of Covid-19) உலகெங்கும் பல நாடுகளில் தொற்றத் தொடங்கி உள்ளன. பிரிட்டனில் ஏற்கனவே ஒரு புதிய வைரஸ் மிக வேகமாகக் கட்டுமீறிப் பரவி ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தொற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது இந்த தென்னாபிரிக்க வைரஸ் என்ற புதிய இரண்டாவது கிருமியும் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க சுகாதார அமைச்சரது தகவலின் படி அந்நாட்டில் பரவிவருகின்ற மாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆரோக்கியமான இளவயதினரிடையே யும் வேகமாகத் தொற்றிக் கடும் நோய்ப் பாதிப்புகளை உண்டாக்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் பரவிவருவதை விடவும் மிக விரைவாகத் தொற்றுகின்ற அந்த புதிய வைரஸுக்கு அந்நாட்டு ஆய்வாளர்கள் 501.V2 எனப் பெயரிட்டிருக்கின்றனர். புதிய வைரஸ் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

பிரிட்டன், ஜேர்மனி, இஸ்ரேல், சவுதி அரேபியா, மொறீஸியஸ், துருக்கி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தென்னாபிரிக்காவுடனான விமானப் போக்குவரத்துகளை இடைநிறுத்தி உள்ளன.

தென்னாபிரிக்கா அதன் வரலாற்றில் “எய்ட்ஸ்” பெருநோய்த் தொற்றுக் காலத்துக்கு திரும்புவது போன்ற ஒரு நிலைமைக்கு மீண்டும் செல்வதை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Zweli Mkhize எச்சரித்திருக்கிறார்.