சென்னையில் தனிமைப்படுத்திக் கொள்ளும் ரஜினி

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி பற்றிய விவரங்களை அறிவிப்பதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவுக்குள் கொரோனா நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே அண்ணாத்த யூனிட்டில் கொரோனா பரவியதால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் தொடங்கப்பட்டு, வேகமாக நடந்தது.

இந்நிலையில் வழக்கமாக படப்பிடிப்புத் தளத்தில் இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் முதலில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது என தகவல் வெளியானது. இதனால் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி அடைந்தனர். தனி விமானம் மூலம் படப்பிடிப்புக்கு அனைவரையும் அழைத்துச் சென்று, வெளியே எங்கும் செல்லக் கூடாது புதியவர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என்று கடும் நிபந்தனைகளோடுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நேற்று (டிசம்பர் 23) வெளியிட்ட அறிவிப்பின்படி, “ அண்ணாத்த யூனிட்டில் நான்கு பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்துக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. மிகுந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி தனது இளையமகள் சௌந்தர்யாவுடன் ஹைதராபாத் சென்றிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருக்கு அளிக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை மகள்தான் பார்த்துப் பார்த்து கொடுத்து வந்தார். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே, ‘நான் ஒரு நாளைக்கு 14 மாத்திரை சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்’ என்று ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொண்டிருக்கும் ரஜினி அண்ணாத்த ஷூட்டிங்கில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களோடு இருந்திருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யார் யார், அவர்களோடு கடந்த நாட்களில் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் யார் என்று தயாரிப்புத் தரப்பான சன் பிக்சர்ஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்ட ரஜினிகாந்த் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு சென்னைக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று ரஜினி அறிவித்திருந்த நிலையில்.. ரஜினி தன்னை பத்து முதல் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்திக் கொண்டால் .திட்டமிட்டபடி டிசம்பர் 31 ஆம் தேதி தனது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில் ரஜினி சென்னை வந்த பிறகு தெரியவரும்.