மஹர சிறைச்சாலை வன்முறை – இறுதி விசாரணை அறிக்கை இம்மாதம் 30இல் சமர்ப்பிப்பு

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பாக ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஐவரடங்கிய விசாரணைக்குழு அமைக் கப்பட்டது. இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவரத்ன செயற்பட்டார்.

சிறைச்சாலை மோதலுக்கான காரணம் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி விசாரணைகளை முன்னெடுத்த இக்குழு அண்மையில் இடைக்கால அறிக்கையைக் கையளித்தது.

இந்தநிலையில், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட முழு அறிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலை மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர். இரு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 117 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.