இனங்களைக் குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதிக்கமாட்டோம் – சஜித் உறுதி

இனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதனை எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து இன மக்களதும் மதஉரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே நாட் டைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்றுப் பொரளையில் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஒருவர் மரணித்தால் அந்த நபரின் இறுதிச் சடங்கை அவர்களின் விருப்பத்தின்பேரில், அவர்களின் மத கலாசார அடிப்படையில் மேற்கொள்வது எமது நாட்டில் அனைத்து மதத்தவர்களுக்கும் இருக்கும் உரிமையாகும். தற்போது அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது. இது பெரும் பேரழிவாகும். இதற்குப் பிரதான காரணமாக இருப்பது, விஞ்ஞானம் தோல்வியுற்று, பொய், ஏமாற்று வெற்றி பெற்றிருப்பதாகும்.

விசேடமாக பௌத்தர்களுக்கு அவர்களின் இறுதிக் கிரியையை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்கும் மத வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களின் மதக் கலாசாரத்துக்கும் இடமளிக்கவேண்டும்” என்றார்.