மருதனார்மடம் கொத்தணி 104 ஆக அதிகரிப்பு – நேற்று மேலும் 9 பேருக்குத் தொற்று

மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 13ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104ஆக உயர்வடைந்துள்ளது. மருதனார்மடம் சந்தைத் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மல்லாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறுவிளானைச் சேர்ந்த ஒருவரும் காங்கேசன்துறையைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கோவிட் -19 தொற்று நோய்க்கொத்தணி இதுவாகும்.