புதிய கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவில் வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு இங்கிலாந்திலிருந்து வந்த 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா வைரஸ் புதிய வடிவம் பெற்று வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்பு பரவிய வைரஸைக் காட்டிலும், இது 70 சதவிகிதம் அதிகளவு பரவி வருகிறது என்றும், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனால் பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும், அயர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.

இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ”இங்கிலாந்தில் கொரோனா பரவும் சூழல் நிலவுவதால், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் வரும் 31ஆம் தேதி இரவு 23:59 வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை ஜனவரி 22ஆம் தேதி இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள், இங்கிலாந்திலிருந்து பயணிகள் யாரையும் நம் நாட்டுக்கு அழைத்து வரக்கூடாது. இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயணிகள் அழைத்து வரப்படவில்லை என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கனவே புறப்பட்ட விமானங்கள், 22ஆம் தேதி இரவு 23:59 மணிக்குள் இந்தியாவிற்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது லண்டனிலிருந்து வரும் பயணிகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டு அவர்களைத் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொரோனாவின் இன்னொரு வகையான லைன் ஏஜ் பி117 என்ற வைரஸ் அதிக வீரியத்துடன் லண்டனில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 76 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து விட்டு வருபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பப்படுகின்றனர். தற்போது அந்த முறையை மாற்றி விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 5 மணி நேரத்தில் முடிவுகள் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்.

லண்டனிலிருந்து சென்னைக்கு நேரடியாக விமானங்கள் இல்லை என்றாலும் வேறு நகரங்கள் வழியாக வரும் விமானங்களையும் கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமின்றி கடந்த ஒருவரமாக லண்டன் பயணிகளுடன் பயணித்து வந்த சக பயணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லண்டனிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தத் தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுபோன்று கர்நாடக அரசும் , கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்களின் பட்டியலைப் பெற்றுப் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளது.