விஜய் சேதுபதி நடிக்கும் புது வெப் சீரிஸ்

திரைப்படங்களைத் தாண்டி வெப் சீரிஸ்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. படங்களைத் தாண்டி, அதிக கவனத்தையும் பெறுகிறது வெப் சீரிஸ்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான வெளிநாட்டு வெப் சீரிஸ்களைத் தாண்டி, இந்தியாவிலும் மிகச்சிறந்த வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. அப்படி, அமேசான் பிரைம் வீடியோவில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸில் ஷாகித் கபூர், மாளவிகா மோகனனுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி.

அமேசான் பிரைம் தளத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘தி பேமிலி மேன்’. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் செம ஹிட். இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டி.கே. இருவரும் இணைந்து இயக்கியிருப்பார்கள். இந்த இரட்டை இயக்குநர்களின் அடுத்த வெப் சீரிஸில்தான் ஷாகித் கபூரும் மாளவிகா மோகனனும் நடிக்கிறார்கள். இந்த வெப் சீரிஸில் முக்கிய ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த வெப் சீரிஸ் உருவாக இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதற்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டதால், புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருக்கும், பல பெரிய படங்கள் திரையரங்க ரிலீஸை ஏதிர்பார்க்கும் என்பதால் மீண்டும் வெப் சீரிஸ் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறதாம் பிரைம் வீடியோ.

விஜய் சேதுபதி நடிக்கும் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிறதாம். அதனால், தென்னிந்திய நடிகர்களும் அதிகமாகப் படத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழிலிருந்து நேரடியாக ஓடிடி தளத்தில் ஜெயம் ரவியின் பூமி மற்றும் ஆர்யாவின் டெடி படங்கள் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.